பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் ராணுவ முகாம் மீதான தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் காவல்துறையினர் முதல்கட்டமாக அறிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் ராணுவ முகாமிற்குள் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த சம்பவத்தில் ஏதேனும் பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணையை ராணுவம் தொடங்கியுள்ளது. விரைவு நடவடிக்கைக் குழு தீவிரப்படுத்தப்பட்டு ராணுவ முகாமிற்குள் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாம் மீதான தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பு குறைவு. ஏற்கனவே அங்கு 2 நாட்களுக்கு முன் 28 குண்டுகள் நிரம்பிய ஒரு துப்பாக்கி காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் யாரேனும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது என காவல்துறையினர் கருதுகின்றனர். இதையடுத்து ராணுவ முகாமின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் ராணுவ முகாமில் நடந்தது தீவிரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது. பதிண்டா சீனியர் எஸ்.பி. குரானா கூறுகையில், “பஞ்சாப் காவல்துறை, பட்டிண்டா ராணுவ முகாமுக்கு வெளியில் தயார் நிலையில் நிற்கிறது. ஆனால் ராணுவத் தரப்பில் உள்ளே நுழைய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை” என்றார்.
