ஒடிசாவை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி திருத்தணி ரயில் நிலையம் அருகே தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிடுள்ள அறிக்கையில்,’ 27.12.2025 அன்று, திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே, சில நபர்களால் ஒருவர் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருத்தணி காவல் நிலையத்தில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரின் புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவருக்கு முறையான உதவியும் அளிக்கப்பட்டது. மேற்கண்ட சம்பவம் தொடர்பான புலன் விசாரணையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவேற்றம் செய்வதற்கான நோக்கத்துடன், சட்டத்துக்கு முரணான வகையில் 4 இளஞ்சிறார்கள் இந்த குற்றத்தை செய்திருப்பது தெரியவந்தது. இவ்வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தவிர பிற மாநில நபர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சமீபத்தில் ஏதும் நடைபெறவில்லை. பிற மாநில நபர்கள் இங்கு பாதுகாப்பாகவும், இணக்கமாகவும் வாழ்வதற்கு தகுந்த சூழல் நிலவுகிறது. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும், அவர்கள் பணியாற்றும் இடங்களிலும் போதுமான காவல் ரோந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை உறுதி செய்கிறதற்காக கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தின் உணர்வுபூர்வ தன்மையை கருத்தில் கொண்டு, தாக்குதல் தொடர்பான இவ்வீடியோவை சமூக ஊடக தளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு பரப்பப்படுவதால் பொது அமைதி மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்,
இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம் அளித்துள்ளார். அதில், டிச., 27 ல் திருத்தணியில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. ரயிலில் வட மாநிலத்தவர் தாக்கப்பட்டார் எனக் கூறப்படுவது தவறு. முறைத்து பார்த்ததால் தகராறு ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர், புலம்பெயர் தொழிலாளி இல்லை. அவர், 2 மாதங்களாக பல இடங்களுக்கு சென்றுள்ளார். சென்னையில் இருந்து திருத்தணிக்கு இளைஞர் சென்ற நேரத்தில் 4 சிறுவர்கள் உடன் இருந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் நேற்று முன்தினம்( டிச.,28) கைது செய்யப்பட்டனர். சொந்த ஊருக்கு செல்லும்போது தாக்குதல் நடந்துள்ளது. சிறுவர்களிடம் இருந்து 2 பட்டாக்கத்தி, மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வலுக்கட்டாயமாக ரயிலில் இருந்து இறக்கிவிட்டு, பட்டாக்கத்தியால் தாக்கி அதனை வீடியோ பதிவு செய்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளானவர் நலமுடன் உள்ளார். வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் சிறுவர்கள் மீது அதிகபட்ச தண்டனை கிடைக்கும் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஎன்எஸ் 109 வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயிலில் இருந்த 4 சிறுவர்களில் 3 பேர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவரை நீதிபதியின் அறிவுரைப்படி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம். முதற்கட்ட விசாரணையில் சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை.அவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்தினார்களா? என விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.