பரபரப்பான திருச்சி சூப்பர் பஜாரில் மூக்குத்தி, தோடுக்காக மூதாட்டியை கொன்று குப்பைத் தொட்டியில் வீசியவர் கைது…!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணி ( வயது 72). இவரது கணவர் அம்மாசி ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் இறந்து விட்டார். இவர்களுக்கு வனத்தான், நாகப்பன் என இரு மகன்கள் உள்ளனர். கணவன் இறந்த நிலையில், ஓய்வூதியம் பெற்று வந்த கல்யாணி, மண்ணச்சநல்லூரில் உள்ள தனது இளைய மகன் நாகப்பனுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று ஓய்வூதிய பணத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்காக திருச்சி சூப்பர் பஜார் வந்துள்ளார். 8 ம் தேதி காலை தனது வீட்டிலிருந்து புறப்பட்ட கல்யாணி நேற்று(9.12.2024) மதியம் வரை எங்கு சென்றார் என தெரியாத நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் பரபரப்பான திருச்சி சூப்பர் பஜார் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டி அருகே சாக்கில் சுற்றப்பட்ட நிலையில் மூதாட்டியின் சடலம் கிடந்தது. இது குறித்த தகவலின்பேரில் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை பிரித்துப் பார்த்தபோது அவர் காது, மூக்கில் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தன. இதனால் மூதாட்டி நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதினர். பின்னர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், சூப்பர் பஜார் பகுதியில் உள்ள சிசிடி காட்சிகளை பார்வையிட்டனர். அதில், சூப்பர் பஜார் பகுதியில் உள்ள தனியார் ஆயத்த ஆடையகத்தில் வேலை பார்த்து வந்த தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் ஹாசன் (வயது 54) என்பவர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரைப் பிடித்து தங்களுக்கே உரிய பாணியில் விசாரணை மேற்கொண்டனர். அதில், இரவு நேரத்தில் கல்யாணி அங்கு வந்துள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த அப்துல் ஹாசன், கல்யாணி அணிந்திருந்த மூக்குத்தி, தோடு ஆகியவற்றை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ந்து போன கல்யாணி சத்தம் எழுப்பவே அவரது கழுத்தை நெரித்து கொலை செய்த அப்துல் ஹாசன், அவர் அணிந்திருந்த மூக்குத்தி, தோடு ஆகியவற்றை கழட்டி எடுத்துக்கொண்டு சணல் சாக்கில் கல்யாணியின் உடலை திணித்து, மூட்டையாக கட்டி ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வந்து விட்டது தெரியவந்தது. அதன்பேரில், அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மூக்குத்தி, தோடுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.