அரியலூர், பெரம்பலூர் பேருந்துகள் இயக்கம் திருச்சி,பஞ்சப்பூரில் இருந்தா ? சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தா? குழப்பம் தீர்த்தார்..!- அமைச்சர் கே.என்.நேரு…
திருச்சி,பஞ்சப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 9ம் தேதி திறந்து வைத்தார். ஏற்கனவே திருச்சியில் ஜங்ஷன் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய இரு இடங்களில் பேருந்து நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்தே அனைத்து வழித்தடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என பேசப்பட்டது.இதனால் திருச்சியின் புறநகர் பகுதிகளான அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருமா ? அல்லது பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு சென்று மீண்டும் பஸ் மூலம் திருச்சி மாநகருக்கு வர வேண்டுமா ? என மக்கள் மனதில் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் நிலவியது. இந்நிலையில், இதற்கான பதிலை தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி,பஞ்சப்பூரில் புதிதாக அமைய உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கான கட்டுமான பூஜை இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது திருச்சியில் இருந்து பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுமா ? அல்லது ஏற்கனவே உள்ளது போல சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுமா ? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படும் என பதில் அளித்தார்.
Comments are closed.