சித்திரை விசு என்று அழைக்கப்படும் ஏப்ரல் 14ஆம் தேதி அனைத்து சைவ வைணவ கோவில்களிலும் வழிபாடுகளும் ஆராதனைகளும் நடக்கும்.
எல்லா கோயில்களிலும் அன்று”பஞ்சாங்க படனம்” என்று நடத்துவார்கள்.
அன்று பஞ்சாங்கம் படிப்பது என்பது மிகவும் சிறப்பு. பஞ்சாங்கம் என்பது அன்றையதிதி, நட்சத்திரம்,(வாரம்), யோகம், கரணம் என்ற ஐந்து
அங்கங்களைப் படிப்பது.இதில் திதியைச் சொல்வதன் மூலமாகமகாலட்சுமியின் அருளும், நட்சத்திரத்தைச் சொல்வதன் மூலமாக பாவங்களிலிருந்து விடுதலையும், நாளைச் சொல்வதினால் ஆயுள் விருத்தியும், யோகத்தைச்சொல்வதினாலே நோயிலிருந்து விடுதலையும், கரணத்தைச் சொல்வதால் செய்கின்ற செயலில் வெற்றியும் கிடைக்கும்.
சித்திரை விசுவை வரவேற்க முதல் நாளே வீட்டைத்தூய்மைப்படுத்துங்கள். மாவிலைத் தோரணங்கள் கட்டுங்கள். அது தீய சக்திகளை விரட்டும்.
முந்தைய நாள் இரவே பூஜை அறையில் மங்கலப் பொருள்களான வெற்றிலை பாக்கு, புஷ்பம், முக்கனிகள், தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், அரிசி,
பருப்பு, வெல்லம், கண்ணாடி முதலிய பொருள்களைப் பரப்பி வையுங்கள். அடுத்த நாள் காலை எழுந்து குளித்து விட்டு முதன்முதலாக பூஜை அறையில்
இந்த மங்கலப் பொருள்களை பார்ப்பதன் மூலமாக, அந்த வருடம் முழுக்க நமக்கு மங்கலங்களாக இருக்கும். இதனை சித்திரை விஷூ என்பார்கள்.
உங்கள் இஷ்டதெய்வத்தை மனதாரப்பிரார்த்தனை செய்யுங்கள். அன்று வீட்டில்உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள், மாதப்பிறப்பை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும். அன்றைய தினம் வேப்பம்பூப் பச்சடி. மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, பாயசம், நீர்மோர் போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புத்தாண்டு நாளில், குலதெய்வ வழிபாடு முக்கியம். சர்க்கரைப் பொங்கலோ பாயசமோ நைவேத்தியமாகப் படையலிட்டு வேண்டிக் கொள்ளுங்கள்.
நேர்மறை சிந்தனையோடு தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட, குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும். வீட்டின்தரித்திரம் விலகும்.
சகல செல்வங்களும்குடிகொள்ளும்.