நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல். உடலில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவது, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பது என்று மிக முக்கியமான பணிகளை செய்யும் உறுப்பாக கல்லீரல் உள்ளது. இந்தியா போன்ற மனிதவளமிக்க நாட்டில் 5-ல் ஒருவருக்கு கல்லீரல் சம்பந்தமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது. அப்போது மருத்துவமனை கூடுதல் துணை தலைவர், பிரிவு தலைவர் ஜெயராமன் கூறுகையில், நிபுணத்துவம் மிக்க அறுவை சிகிச்சை மருத்துவர்கள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளதால் எங்களை நாடிவரும் நோயாளிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க முடிகிறது என்றார். மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் குமரகுருபரன் கூறும்போது, அளவுக்கதிகமாக மது அருந்துவது உள்ளிட்ட காரணங்களால் கல்லீரலின் செயல்பாட்டில் திடீரென பாதிப்பு ஏற்படலாம். சற்று கவனமின்றி இருந்தால் மஞ்சள் காமாலை, காய்ச்சல் மற்றும் கவனச்சிதறல் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார். அப்போலோ மருத்துவமனை கல்லீரல் மாற்று சிகிச்சை தமிழ்நாடு தலைவர் இளங்குமரன் கூறுகையில், கல்லீரல் நோய் பாதிப்பின் இறுதி நிலையில் உள்ளவர்களுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய உறுப்புகளை மாற்று சிகிச்சைக்கு போதுமான உறுப்புகள் இல்லாமல் இருப்பதாலும், நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அபாயம் இருப்பதாலும் கல்லீரல் பாதிப்புகள் சிக்கலான நிலையை எட்ட வாய்ப்பு உள்ளது. உடல் நலமுடன் உள்ள ஒருவர் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக அளிக்கும்போது தானம் அளித்தவர் மற்றும் பெற்றவர் இருவருக்குமே கல்லீரல் தனது செயல்பாட்டை புதுப்பித்துக்கொள்ளும்.
இதற்கு தீவிர திட்டமிட்ட அறுவை சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றார். திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் விஜய்கணேசன் கூறுகையில், கல்லீரல், கணைய பித்தநாள விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 1½ வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. இதன்மூலம் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் கூட வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 2 குழந்தைகள் உள்பட 10 பேருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு அவர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர் என்றார். அப்போது சிறப்பு மருத்துவர்கள் மஞ்சுநாத், சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். மருத்துவமனை நிா்வாக அதிகாரி சிவம் தனது நன்றியுரையில், எங்கள் மருத்துவ நிபுணர்களின் கூட்டு முயற்சியும், கடமையில் உள்ள உறுதிப்பாடும் தொடர்ச்சியான உத்வேகம் அளிக்கக்கூடியதாக உள்ளது” என்றார்.
Comments are closed.