திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் இரவு நேரங்களில் அரங்கேறும் சமூக விரோத செயல்கள்…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் இரவு நேரங்களில் வகுப்பறை பூட்டை உடைத்து சிலர் உள்ளே நுழைந்து மது அருந்துவது, பெண்களை அழைத்து வருவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்காணித்த ஆசிரியர் குழுவினர் அந்த பள்ளியில் திடீரென அதிகாலை நேரத்தில் “விசிட்” அடித்தனர். அப்போது வாலிபர் ஒருவர் வகுப்பறை பூட்டை உடைத்து உள்ளே சென்று பெண் ஒருவருடன் தங்கி இருந்துள்ளார். அவர்களை வெளியே அழைத்த ஆசிரியர் குழுவினர், அவர்களிடம் நீங்கள் யார்?, எப்படி உள்ளே வந்தீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது அந்த வாலிபர் மது போதையில் உங்களுக்கு என்ன பிரச்சனை? இரவு தங்கி விட்டு காலையில்
செல்ல உள்ளே வந்தேன் என்று தெனாவட்டாக பதில் கூறியுள்ளார். அதற்கு ஆசிரியர் குழுவினர் நீங்கள் இங்கே வந்து தங்குவதற்கு இது என்ன லாட்ஜா, மாணவர்கள் படிக்கும் பள்ளி இல்லையா? என்று கேட்டனர். அதற்கு அந்த வாலிபர் தவறுதான் மன்னித்துக் கொள்ளுங்கள் என்கிறார். நீ மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம், இனி உள்ளே வராது என்று ஆசிரியர் குழுவினர் அவரிடம் கேட்டுக்கொண்டனர். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இதுபோல அரசு பள்ளியில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன. ஆகவே, இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதுபோல அண்மையில் திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆறு பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்து மது அருந்திய சம்பவம் அரங்கேறியது. அவர்களில் போலீஸ்காரரும் ஒருவர். அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.