திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஆர். புவனேஸ்வரி. இவர், சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த எம்.ராஜா என்பவரது கடையில் திருச்சியில் செயல்படும் ஆண்டவர் மினரல் வாட்டர் பாட்டில் ஒன்றை 20-02-2025 அன்று 20 ரூபாய் கொடுத்து வாங்கினார். குடிநீர் பாட்டிலை திறப்பதற்கு முன்பு தயாரிப்பு தேதியை சரி பார்த்தபோது அது காலாவதி ஆகி இருந்தது தெரியவந்தது. மேலும், குடிநீர் பாட்டில் உள்ளே பிளாஸ்டிக் கழிவுகளும், தூசி மற்றும் அழுக்கு கலந்து காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வியாபாரியிடம் கேட்டபோது ஆண்டவர் மினரல் வாட்டர் நிறுவனத்தின் விற்பனையாளர் ரஞ்சித்திடம் இருந்து தினந்தோறும் குடிநீர் பாட்டில்களை வாங்கி விற்பதாகவும், இதற்கு தான் பொறுப்பல்ல என்று ராஜா கூறினார். ரஞ்சித்திடம் கேட்டபோது தான் வெறும் விற்பனை பொறுப்பாளர் மட்டுமே என்றும், நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆண்டவர் மினரல் வாட்டர் நிறுவனம் மீது திருச்சி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புவனேஸ்வரி முறையிட்டார். இந்த மினரல் வாட்டர் பொதுமக்கள் குடிப்பதற்கு உகந்தது அல்ல, பொது நலனுக்கு ஆபத்தானது என்றும், அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வழக்கறிஞர் ஏ.சேகர் ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் இன்று(10-10-2025) தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்திய திருநாட்டில் ஒவ்வொரு மனிதனுக்கும் தூய்மையான குடிநீரை வழங்குவதற்கு உரிமை உண்டு என்று வழக்கறிஞர் எடுத்துரைத்தார். அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சேகர், தவறான வணிக நடவடிக்கையில் ஈடுபட்டு புகார் தாரருக்கு சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்பது விசாரணையில் இருந்து நன்கு தெரிய வருகிறது. ஆகவே, ஆண்டவர் மினரல் வாட்டர் நிறுவனம் குடிநீர் பாட்டிலுக்கு மனுதாரர் செலுத்திய தொகை 20 ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும், புகார்தாரருக்கு ஏற்பட்ட மன வேதனை மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.3000 மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ரூ.5000 வழங்க உத்தரவிட்டார்.
Comments are closed.