தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. எதிரும், புதிருமாக இருந்த அதிமுகவும் பாரதிய ஜனதாவும் மீண்டும் கைகோர்த்துள்ளன. திமுக, தமது கூட்டணியில் உள்ள கட்சிகளை தக்கவைத்துக் கொண்டுள்ளன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் யாருடனும் கூட்டணி கிடையாது தனித்துதான் போட்டி என்று அறிவித்து உள்ளதோடு சில வேட்பாளர்களையும் களத்தில் இறக்கியுள்ளார். த.வெ.க., பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகள் தங்களது நிலை என்ன என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தங்களது சுற்றுப்பயணங்களை ஏற்கனவே தொடங்கி விட்டனர். அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ராஜேந்திர சோழன் நாணய வெளியீட்டு விழா போன்ற விழாக்களில் பங்கேற்றார். இந்நிலையில், உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளார். 22ம் தேதி தமிழகம் வரும் அவர், நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.