ரம்ஜான் பண்டிகைக்காக சமயபுரம் ஆட்டுச் சந்தையில் வியக்க வைக்கும் விற்பனை…- ரூ.5 கோடியை தாண்டியது! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், சமயபுரம் ஆட்டு சந்தை வாரந்தோறும் சனிக்கிழமை கூடுவது வழக்கம். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து ஆடுகளை தேர்வு செய்து வாங்கி செல்வார்கள். வழக்கம்போல இந்த வாரமும் சந்தை கூடியது. திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், தம்மம்பட்டி, துறையூர், வேலூர், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகளை டெம்போ, லாரி, ஆட்டோவில் ஏற்றி விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்குவதற்கும் ஏராளமானோர் குவிந்திருந்தனர். வழக்கமாக சுமார் ரூ.75 லட்சம் முதல் 1 கோடி வரை விற்பனை நடைபெறும். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் விற்பனை அதிகமாக இருக்கும். இந்நிலையில் மார்ச் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆகவே, நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் வியாபாரம் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ஆடு ரூ.15ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விலை போனது என வியாபாரிகள் தெரிவித்தனர். எந்த ஆண்டும், இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ரூ. 5 கோடிக்கு மேல் விற்பனை ஆனதால் வியாபாரிகளும், ஆடு, வளர்ப்போரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Comments are closed.