தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளில் ஒருவரான கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்ப்பாட்டத்தின் போது நயன்தாரா குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். திண்டுக்கல் சீனிவாசனும், சண்முகமும் பேசியது அருவெறுப்பாக இருக்கிறது. பெண்களை மதிக்கும் தேசம் இந்தியா. பெண்களை வணங்கும் நாடு தமிழ்நாடு. இனியாவது பெண்களை இழிவாக பேச வேண்டாம். பெண்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று த.வெ.க. தலைவர் விஜய் கூறி இருக்கிறார். மாற்று கட்சியினர் பெண்களை இழிவாக பேசுவதை தவிர்க்க வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புவதால், அதை ஓட்டுக்களாக பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். தமிழக வெற்றிக் கழகத்தினர் கல் எறிந்தால் பறந்து ஓடும் காக்கை கூட்டமல்ல. மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வு தரும் கார்மேக கூட்டம். மக்கள் எங்களை நம்புகின்றனர், அவர்களை நாங்கள் நம்புகிறோம். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க நாங்கள் தயாரில்லை. த.வெ.க. துவங்கிய பிறகுதான் தி.மு.க. 5000 ரூபாய் கொடுத்துள்ளது. நாங்கள் மக்களை சந்திக்கும் விதத்ததில் சந்திப்போம். த.வெ.க. வில் உள்ள 23,400 வேட்பாளர்களில் தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்வதால் தான் கால தாமதமாகிறது. என்.டி.ஏ.யுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவதாக ஊடகத்தினர் தான் சொல்கிறீர்கள். எங்களுக்கு அதற்கு நேரமும் இல்லை, தேவையும் இல்லை. தேக்குமரத்தில் நெருப்பும் இல்லை புகையும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.