ஜாமீனில் விடுவிக்கப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரவேற்க வந்த அதிமுக நிர்வாகிகளை சிறை வாசல் வரை அனுமதித்த சிறைத்துறை ஏட்டு “சஸ்பெண்ட்”…!
கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சி பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து பத்திரப்பதிவு செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் . ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர், கடந்த மாதம் 31ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அன்றைய தினம் அவரை 35 வழக்கறிஞர்கள், சிறை கண்காணிப்பாளர் அனுமதியுடன் பார்த்தனர். மேலும், அவரை வரவேற்பதற்காக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் சிறை வளாகத்தில் கூடி நின்றனர். அந்த இடத்தில் யாரையும் நிற்க அனுமதிக்கக்கூடாது என்பது சிறை விதி. ஆனால் அதையெல்லாம் மீறி, 50க்கும் மேற்பட்டோர் சிறையின் முக்கிய வாசலை அடைத்துக் கொண்டு, ஜாமினில் வெளியே வந்த விஜயபாஸ்கரை கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர். இதனால், ‘அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக திருச்சி சிறைத்துறை செயல்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சிறை வளாகத்துக்குள் அதிமுக நிர்வாகிகளை அனுமதித்தது யார் என விசாரிக்க சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், திருச்சி சிறைத்துறை பொறுப்பு டி.ஐ.ஜி. பழனி விசாரித்தார். விசாரணையில், அன்றைய தினம் சிறைத்துறை ஏட்டு கணேஷ்குமார் பணியில் இருந்தது தெரியவந்தது. அதன்படி, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.மேலும், அங்கு பணியில் இருந்த போலீசார் காளிமுத்து, சக்திவேல், அசாருதீன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு ‘மெமோ’ கொடுக்கப்பட்டுள்ளது. இது, சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.