சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சதீஷ் என்ற இளைஞர் மீது அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த போக்சோ வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன் தமிழகத்தைச் சேர்ந்த டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டனர். இந்த குழுவில் ஆவடி சட்டம்- ஒழுங்கு துணை ஆணையர் ஜமன்ஜமால், சேலம் மாநகர சட்டம்- ஒழுங்கு துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையில், அதிரடி திருப்பமாக அதிமுக நிர்வாகி சுதாகர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சி செய்ததாக அவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கை முதலில் விசாரித்த அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவல் ஆய்வாளர் ராஜி என்பவரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்பதாலும், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை புகாரிலிருந்து விடுவிக்க முயற்சி செய்ததும் தெரிய வந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், பாலியல் வழக்கில் கைதான அ.தி.மு.க. வட்ட செயலாளர் சுதாகரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதேபோல, கைது செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் ராஜியை சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Comments are closed.