கூட்ட நெரிசலை தவிர்க்க அட்சய திருதியை நாளில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம்…!
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்தமாக வீடு, நிலம் வாங்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். இதற்காக அவர்கள் சம்பாதிக்கும் ஒரு பகுதியை சேமிக்க தொடங்குகிறார்கள். சில ஆண்டுகள் கழித்து சேமித்த பணத்தில் வீடோ அல்லது நிலமோ வாங்குகிறார்கள். அவ்வாறு வாங்கும் நிலத்தையோ அல்லது வீட்டையோ நல்லநாளில் அல்லது சுப முகூர்த்த நாளில் பத்திரப்பதிவு செய்ய விரும்புவார்கள். அந்த நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் நாளை 30ம் தேதி அட்சய திருதியை நாள் வருகிறது. இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு, பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது சித்திரை மாதத்தின் மங்களகரமான தினமான 30.04.2025 அட்சய திருதியை அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அன்றையதினம் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும். ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.