மணப்பாறை மாட்டுச் சந்தையில் வாகன உரிமையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல்?* விசாரணை நடத்த திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவு…!
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பு இருப்பதுபோல, திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறைக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. முறுக்குக்கு பெயர் போன ஊரில் மாட்டுச்சந்தைக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. பிரசித்தி பெற்ற மணப்பாறை சந்தையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், திருச்சி உட்பட பிற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்வார்கள். செவ்வாய் மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை சுமார் 3 முதல் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும். சந்தைக்கு வரும் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம், மாடுகளுக்கான நுழைவுக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கான கட்டண வசூல் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. குத்தகை எடுத்த தரப்பினர் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட பல மடங்கு கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாடுகளை சந்தைக்கு கொண்டு வரும்போது மட்டுமல்லாமல், விற்ற மாடுகளைக் கொண்டு செல்லும்போதும் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைக்கண்டித்து விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் நடத்திய போராட்டத்துக்குப் பிறகு முத்தரப்புக் கூட்டம் நடத்தி, கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அடுத்த வாரமே மீண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சிதம்பரம் அளித்த புகாரின் பேரில், ஆர்டிஓ விசாரணைக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Comments are closed.