நடிகர் கமலஹாசன் நடத்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல சினிமா பிரபலங்கள் இணைந்து தங்களது ஆதரவுகளை அளித்தனர். அந்த வகையில், 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, நடிகை வினோதினி வைத்தியநாதன் சேர்ந்தார். தற்போது அவர், கமல் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் நீதி மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன். அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச்சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை – எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும் சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரிய வைத்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செயலும் பணமும் எனது சொந்த வாழ்க்கைத் தரத்தை ஓரளவு முன்னேற்றுவதற்கும், நான் மேற்கொண்டுள்ள தெருவிலங்குகளின் (நாய், பூனை, ஒரு கோஷாலாவில் என் செலவில் வாழும் சில மாடுகள்) வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்குமே சென்றிருக்கிறது. ஹிந்தியில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதை நான் சொல்லி பல பேரைத் திட்டியிருக்கிறேன். காம்சோர் என்பதுதான் அந்த வார்த்தை. ஆங்கிலத்தில் சொன்னால் Slacker. கடமைகளைத்தட்டிக்கழிக்கும் சோம்பேறி. மய்யத்தில் நான் செய்தது காம்சோர். இதை ஒத்துக்கொள்வதில் தவறில்லை என்றும் இந்த உண்மையை வெளிப்படுத்துவதன்மூலம் எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் கிடைக்கிறது என்றும் நம்புகிறேன்.
பலர் இங்கு, கட்சி நடக்கிறதா என்றெல்லாம் கேட்பார்கள். எப்பொழுதும் நான் சொல்வது – கட்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சிந்தியுங்கள்.சிறு துளி கூட பெரு வெள்ளமாகும். அச்சிறு துளியைக்கூட நான் என் பல அலுவல்களுக்கு நடுவில்தான் செய்திருக்கிறேன் முழுமையாக அல்ல. தமிழக அரசியல் யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. தலைவரோடு நேரடியாக உரையாட, கேள்வி கேட்க, பற்பல நிகழ்ச்சிகளைத் துவக்க, பற்பல செயல்பாடுகளை முன்னெடுக்க. ஆனால் அவற்றையெல்லாம் நான் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. நம்மவர் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழகம் மட்டுமல்ல, வினோதினியும் தான். தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழக அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையளவிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இவ்வாறு நடிகை வினோதினி வைத்தியநாதன் கூறியுள்ளார்.
Comments are closed.