திருச்சி அரியமங்கலம் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் மதியழகன்(55). சினிமா துணை நடிகரான இவரது மனைவி மாலதி(46). இந்த தம்பதிக்கு நடராஜ் என்ற மகன் உள்ளார். மாலதி, உமாராணி என்பவரிடம் ரூ.6 லட்சம் கந்து வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பிக், கொடுக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்த உமாராணி, மாலதியை தனது வீட்டில் கடந்த 2 மாதங்களாக தனியறையில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மதியழகனின் தம்பி சதீஷ் என்பவர் திருச்சி வழக்கறிஞர்கள் சிலரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சில வழக்கறிஞர்கள் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ததகவலின்பேரில், காந்தி மார்க்கெட் போலீசார் உமாராணியின் வீட்டிற்கு சென்று அங்கு தனியறையில் அடைக்கப்பட்டிருந்த மாலதியை மீட்டனர்.

அப்போது அவர் போலீசாரின் கால்களில் விழுந்து நன்றி தெரிவித்தார். பின்னர் மாலதியை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த உமாராணியை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மாலதியின் மகன் நடராஜ் குறும்படம் எடுப்பதாகவும், சினிமா விளம்பர படங்கள் எடுப்பதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி பல பேரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மாலதி ஏமாற்றியதாகவும், பணம் கொடுத்தவர்களிடம் இருந்து அவரை காப்பாற்றவே தனது வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். மாலதி குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் பல பேரிடம் பணம் வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இது தொடர்பாக இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாலதியை போலீசார் மீட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.