Rock Fort Times
Online News

மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை..! இயக்குனர் உத்தரவு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. இதில், பங்கேற்ற மாணவ-மாணவிகள் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அவர்களில் 20 ஆயிரத்து 83 பேர் மருத்துவ இடங்களை தேர்வு செய்துள்ளனர். இட ஒதுக்கீடு இறுதி முடிவு நாளை(06-08-23) வெளியிடப்பட உள்ளது. இடங்களை தேர்வு செய்தவர்கள் ஒதுக்கீட்டு ஆணையை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம். ஒதுக்கீட்டு கடிதம் பெற்ற மாணவ-மாணவிகள் 11-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படித்த 606 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் பெற்றுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மாணவ-மாணவிகளிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. அதனை அனைத்து மருத்துவக் கல்லூரி டீன்கள் மற்றும் முதல்வர்கள் பின்பற்ற வேண்டும் என தற்போது அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் அனைத்து அரசு, சுயநிதி மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், 7.5 சதவீத அரசு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடங்களை பெற்றுள்ள மாணவ-மாணவிகளிடம் கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், விடுதி, உணவு கட்டணம், புத்தகம், வெள்ளை கோட், ஸ்டெதஸ்கோப், பல்கலைக்கழக பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம் உள்பட எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது. மருத்துவ படிப்பில் சேரும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள். அதனால், அவர்களது விண்ணப்பத்தை உயர்கல்வி துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்