விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி மரணம் அடைந்ததை ஒட்டி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 14-ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி முடிவடைகிறது. ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகிகளை மாற்றம் செய்து கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வந்த புகழேந்தி மறைவெய்திய காரணத்தால் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற கவுதம் சிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வரும் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்கு பதிலாக ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
இவர்களுக்கு கழக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு நல்கி இணைந்து பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.