Rock Fort Times
Online News

திருச்சி, பொன்மலைப்பட்டி திரு இருதய பள்ளி தலைமை ஆசிரியர் மீது அபாண்டமாக பழி சுமத்தும் தாளாளர் மீது நடவடிக்கை-* பிஷப்பிடம் பொதுமக்கள் புகார்…!

கிறிஸ்தவ மிஷனரி சார்பில் பல்வேறு பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் திருச்சி, மேலபுதூரில் உள்ள பிஷப் ஹவுஸ்க்கு பொன்மலைப்பட்டி பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பொன்மலைப்பட்டி திரு இருதய பள்ளி விவகாரம் தொடர்பாக பிஷப் ஹவுசை முற்றுகையிட்டு முறையிட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உங்களது கோரிக்கை தொடர்பாக பிஷப்பிடம் மனு கொடுக்க அறிவுறுத்தினர். அதன்பேரில், முக்கிய நிர்வாகிகள் உள்ளே சென்று பிஷப் சவரிமுத்து ஆரோக்கியராஜை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில், திருச்சி பொன்மலை பட்டியில் திரு இருதய மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜஸ்டின் திரவியம் பொறுப்பேற்ற நாள் முதல் பள்ளியின் வளர்ச்சிக்காகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காகவும் அயராது பாடுபட்டு வருகிறார். சிஎஸ்ஆர் நிதிமூலம் 2 லட்சம் ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து கொடுத்து இருக்கிறார். அதேபோல, 3 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 மர பீரோக்கள், இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் 50 மேஜை- நாற்காலிகள், பள்ளி நூலகத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் செலவில் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆண்டுக்கு ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பாடுபட்டு வருகிறார். இதற்காக கடந்த 2023- ம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இருந்து சிறந்த ஆசிரியருக்கான விருதை பெற்றிருக்கிறார். ஏறக்குறைய 10 ஆண்டுகளாக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முதுகலை கணித ஆசிரியர்களுக்கான கருத்தாளராக பணிபுரிந்தும் வருகிறார். தவறு செய்யும் மாணவர்களின் பெற்றோர்களை அவ்வப்போது அழைத்து தேவையான அறிவுரைகளை வழங்கி வருகிறார். ஆசிரியர்களின் நிறை,குறைகளையும் கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்.

ஆனால், பள்ளியின் தாளாளர் ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர், தனக்கு வேண்டப்பட்டவரை தலைமை ஆசிரியர் ஆக்குவதற்காக, தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம் மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சில நபர்களை வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார். இனிமேலும்,  இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தாளாளர் சேவியர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்