தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு துறைக்கு புதிய டிஜிபியாக அபய்குமார்சிங் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்ட உத்தரவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி பிரிவு டிஜிபியாக இருந்த அபய்குமார்சிங், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவின் புதிய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1992 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அபய்குமார்சிங் பீகாரை சேர்ந்தவர். இவர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் இவர் மதுரை எஸ்பியாகவும், ராமநாதபுரம் டிஐஜியாகவும், தென்மண்டல ஐ.ஜியாகவும், திருநெல்வேலி போலீஸ் கமிஷனராகவும், சென்னை மாநகர தெற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனராகவும் செயல்பட்ட அனுபவம் கொண்டவர். மேலும், தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட்டின் (TNPL) தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும் பொறுப்புவகித்தவர். மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பணியாற்றி பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்ற பிறகு அபய்குமார் சிங் தான் அந்த பொறுப்பிற்கு நியமனம் செய்யப்பட்டார். அதன் பிறகு சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார். சிபிசிஐடி இயக்குநர் பதவிக்கு டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் நபரே நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்த அபய்குமார்சிங்கை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது ஏடிஜிபி அந்தஸ்திற்காக அந்த பதவி பணியிறக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அடுத்த சில மாதங்களில் டிஜிபி அந்தஸ்திற்கு அபய்குமார்சிங் பதவி உயர்வு பெற்றார். அந்த அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதயத்தில் இடம் பிடித்திருப்பவர் அபய்குமார்சிங்.
இந்த சூழலில் தான் நேற்று (02.05.2023) அவர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்புக்கான கண்காணிப்பு பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு திமுக அரசு அமைந்த பிறகு பல அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே தான் ஐபிஎஸ் அதிகாரியான கந்தசாமி ஓய்வு பெற்றார். தற்போது அபய்குமார்சிங் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவின் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளதால் இவரது அடுத்த நடவடிக்கைகள் எப்படி இருக்கும் ? என்ற எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் நேர்மையான அதிகாரிகளை உயர் பதவிக்கு கொண்டு வந்தார். அவர்களில் ஒருவர் தான் மிகச் சிறந்த ஐஏஎஸ் அதிகாரியான தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளரான இறையன்பு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதற்கெல்லாம் ஆடுவார் . இறையன்பு ஐஏஎஸ் அதிகாரியை வைத்து முதல்வர் பலரையும் பந்தாட போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இறையன்பு தனக்கே உரிய பாணியில் நேர்மையான அதிகாரியாக ஓய்வு பெறும் வரை செயல்பட்டு வருகிறார். அதேபோன்று இப்போது நேர்மையான அதிகாரியான அபய்குமார்சிங் ஐபிஎஸ், கந்தசாமிக்கு பதிலாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவரை வைத்து முதல்வர் மு க. ஸ்டாலின் காய் நகர்த்துவாரா ? என்ற எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் உருவாகிவருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.