Rock Fort Times
Online News

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா “சஸ்பெண்ட்”- திருமாவளவன் நடவடிக்கை…!

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் 06.12.2024 ம் தேதி நடைபெற்றது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். எனவே மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது” எனப் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசிக நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் அவ்வாறு பேசியது தவறுதான். இந்த விவகாரம் தொடர்பாக “கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம்” என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனாவை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் (சஸ்பெண்ட்)செய்து திருமாவளவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. இது குறித்து கடந்த டிச.,7ம் தேதி, கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு ‘தவறான முன்மாதிரியாக’ அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி,கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்