திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் ஆர்.எம்.எஸ். அலுவலக வளாகத்தில் ஆதார் சேவை மைய தொடக்க விழா நடைபெற்றது. மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் கலந்து கொண்டு சேவை மையத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில் :
பல்வேறு அத்தியாவசிய சேவைகளை மக்களுக்கு வழங்கும் மகத்தான பணியை அஞ்சல் துறை செய்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படாத காலத்தில் இருந்து பல்வேறு சேவைகளை அஞ்சல்துறை செய்து வருகிறது. தற்போது ஆதார் சேவை, ஆயுள் காப்பீடு, பார்சல் சர்வீஸ், விரைவுத்தபால் போன்ற சேவைகளையும் சிறப்பாக செய்து வருகிறது. தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின் அறிவித்த பெண்களுக்கு வழங்கும் உதவி தொகையையும் அஞ்சல் துறை மூலம் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார். நிகழ்ச்சியில் மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலாதேவி தலைமை வகித்து பேசுகையில் :
அலுவலகங்களில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை தற்போது ஆர்.எம்.எஸ். அலுவலகத்திலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 110 கிராம ஊராட்சிகளில் ஆதார் சேவை நடந்து வருகிறது. வங்கி வசதியில்லாத கிராமங்களில் கூட தபால்காரர்கள் வீடு தேடி சென்று வாடிக்கையாளர்கள் கணக்கில் உள்ள பணத்தை வழங்கி வருகின்றனர். குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு), ஆதி திராவிடர் நல நிதி வழங்குவது போன்ற செயல்பாடுகளை அஞ்சல் துறை செய்து வருகிறது. டிஜிட்டல் வங்கி சேவை மூலம் பேப்பர் இல்லாத சேவைகளையும் செய்து வருகிறோம். அரசு தெரிவிக்கும் கட்டணம் தவிர மறை முக கட்டணங்களை அஞ்சல் துறை வசூல் செய்வதில்லை என்றார். பரிட்சார்த்த முறையில் கடந்த சில வாரங்களாக செயல்பட்டு வந்த இந்த ஆதார் சேவை மையம் தற்போது முழு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர் கலைசெல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் (ஆர்.எம்.எஸ்.) சணபதி சுவாமிநாதன் வரவேற்றார். உதவி கோட்ட கண்காணிப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.