திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில் திருச்சி அலகு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் உணவு பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக திருச்சி, அரியமங்கலம் காட்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டூர் தனியார் பள்ளி அருகே வந்த ஒரு ஆம்னி வேனை நிறுத்தி சோதனை இட்டபோது அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வேனை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர், திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்த சத்யா(34) என்பதும், வீடு, வீடாக சென்று ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 25 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட 1250 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர்.
Comments are closed.