திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய எம்.சத்தியப்பிரியா ஐ.பி.எஸ். உள்ளிட்ட 27 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.
அதன்படி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய சத்திய பிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாகவும், சென்னை சிவில் சப்ளை பிரிவு ஐ.ஜி காமினி, திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்கவுள்ள என்.காமினி, இந்திய சுதந்திர போராட்ட வீரரின் பேத்தி, முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினா் நடராஜனின் மகள், ஜனாதிபதி விருது பெற்ற காவல்துறை அதிகாரி உள்ளிட்ட பன்முக அடையாளங்களைக்கொண்டவர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் தான் இவரது பூர்வீகம். இவரது தந்தை நடராஜன் வழக்கறிஞராக பணிபுரிந்தவர். சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கி நற்பெயர் எடுத்திருந்ததால், 1967-ல் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பளித்தார் அண்ணா. தொடர்ந்து இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது அம்மா வழி தாத்தா சுதந்திர போராட்ட தியாகி. எண்ணமங்கலத்தில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்புவரை பயின்ற காமினி, பிறகு சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை பட்டமும், சென்னை பல்கலைக் கழகத்தில் பொலிட்டிகல் சயின்ஸ் பாடத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். 1996-ம் ஆண்டு டி.எஸ்.பியாக பணியில் சேர்ந்தார். சென்னை அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரியில் பயிற்சியை முடித்த பிறகு விருத்தாச்சலம் டி.எஸ்.பியாக பணியமர்த்தப்பட்டார். பெண்கள் பட்டாலியன் உள்ளிட்ட காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். கோவையில் துணை ஆணையராக இவர் பணியாற்றியபோதுதான் ஏரியல் டிராபிக் சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 16 மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக 4 ஆண்டுகள் திறம்பட பணியாற்றியுள்ளார். இவரது கணவர் பாலமுருகன் கூட்டுறவுத்துறையின் கூடுதல் பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு நித்திலன் என்ற ஒரு மகன் உள்ளார். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி ஐ.பி.எஸ்ன் பணிசிறக்க ராக்போர்ட் டைம்ஸ் செய்திக்குழு சார்பில் மனதார வாழ்த்துகிறோம்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.