தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.பி. செவிலியர்கள் 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர். அங்கும் செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்ததால், மீண்டும் கைது செய்யப்பட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மண்டபத்திலிருந்து வெளியேறிய செவிலியர்கள் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நான்காவது நாளாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் போராட்டம் தொடர்ந்தது. போராட்டக் குழுவினர் இன்று (திங்கட்கிழமை) கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், போராட்டக் குழுவினருடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஒப்பந்தப் பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். மேலும் மகப்பேறு விடுப்பு குறித்தும் பரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.மேலும் அவர் , “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 3,614 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 750 பேருக்கு புதிய பணியிடங்களை உருவாக்கி தரப்படும். பொங்கலுக்கு முன்பாக சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும்” என அவர் உறுதி அளித்தார்.

Comments are closed.