கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவர், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுகலை 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகவும் பணியாற்றி வந்துள்ளார். வழக்கம்போல, தனது உறவினர் வீட்டில் இருந்து மதுக்கரை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, தனக்கு வயிறு உபாதை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு மருந்து எடுத்துக் கொள்வதாகவும் அங்கிருந்த செவிலியர்களிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. மருந்து எடுத்துக்கொண்ட பின், பயிற்சி மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு அவர் சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சக பயிற்சி மருத்துவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பயிற்சி மருத்துவர் சந்தோஷ், உயிரிழந்து கிடந்ததைக் கண்ட அவர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், உடல் உபாதைக்கு ஊசி மூலம் மயக்க மருந்து அதிகளவில் எடுத்துக் கொண்டதால், சந்தோஷ் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது இறப்புக்கான முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Comments are closed.