Rock Fort Times
Online News

கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் திருச்சியில் அவசரமாக திறக்கப்பட்ட ஜவுளிக்கடை…

நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கால அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவு...

திருச்சி துவாக்குடியை சேர்ந்த முருகேசன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:-

திருச்சி – தஞ்சாவூா் ரோடு , திருவெறும்பூர் காட்டூர் கைலாஷ் நகா் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 5 தளங்களைக் கொண்ட, நவநீதா சில்க்ஸ் ஜவுளிக் கடை முழுமையாகக் கட்டுமானப் பணிகள் நிறைவடையாத நிலையில் அவசரமாகத் திறக்கப்பட்டது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இந்தச் சாலை வழியாக தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், சீர்காழி, சிதம்பரம், வேளாங்கண்ணி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த ஜவுளிக் கடைக்கு வாகனங்களில் வருவோருக்கு முறையான வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் சாலைகளில் நிறுத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகளுக்கு செல்வோர் கடும் அவதி அடைகின்றனர். மேலும் ஜவுளிக் கடையிலிருந்து பொதுமக்கள் வெளியேற அவசர வழிகள் இல்லை. தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறையினரிடம் முறையான சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதா? என்ற விவரமும் தெரியவில்லை. எனவே, முழுமையாக கட்டிடப் பணிகளை முடிக்காமலும், அரசு விதிகளைப் பின்பற்றாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கட்டப்பட்ட இந்த ஜவுளிக் கடைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர். சக்திவேல் ஆகியோா் கொண்ட அமர்வு முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில், ஜவுளிக் கடை விதிமீறல் தொடர்பாக மனுதாரர் அளித்த புகார் மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் கிடைக்கவில்லை. இதற்கு முன்பாகவே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என்பதால், இதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மனுதாரர் தரப்பில், தீபாவளி பண்டிகை காலத்தில் அவசரமாக கடை திறக்கப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்கள், போக்குவரத்து நெரிசல் குறித்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் , அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பிய மறுநாளே மனுதாரர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிறகு, எப்படி அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூற முடியும். புகார் அளித்தால், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் நீதிமன்றத்தை நாடினால் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க இயலாது. ஆனாலும், மனுதாரர் சமர்ப்பித்த புகைப்பட ஆதாரங்கள், குற்றச்சாட்டுகள் தீவிரமானது எனத் தெரிய வருகிறது. மனுதாரர் புகாரைத் திரும்ப பெற்றுக் கொண்டு அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மீண்டும் மனு தாக்கல் செய்யலாம் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

 

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்