கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து கல்லூரி வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி அங்காடியில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கிடும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர் அட்டைகளை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் லேப்டாப்கள் வழங்கப்படும். பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்குவதோடு, ஏ.ஐ.வசதி இலவசமாக வழங்கப்படவுள்ளது. பண்டிகை நாட்களில் பரிசளிப்பவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்துள்ள பொருட்களை வாங்கி பரிசளிக்க வேண்டுகிறேன். மத்திய அரசிடமிருந்து பணம் வர வேண்டும். தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் 4000 கோடி பணம் வரவில்லை. இந்த நிதியை விடுவிக்க மத்திய அரசிடம் முதல்வர் பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.