Rock Fort Times
Online News

ஜாபர் சேட் மீதான வழக்கில் திடீர் திருப்பம் ! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடைபெற்றது. இந்த காலகட்டத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக பெற்றதாக கூறி, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஊழல் வழக்காக பதிவு செய்தது.இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜாபர் சேட் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்.,தனக்கு எதிராக ஊழல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்ய உத்தரவிட்ட நிலையில், அமலாக்கத்துறை வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்க கூடாது.தனது மனைவிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிந்த வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான், இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் எம்.எஸ் சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் ஜாபர் சேட்டுக்கு எதிராக ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில்,இந்த வழக்கில் சில சந்தேகங்கள் இருப்பதால் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை சார்பில் சில விளக்கங்கள் அளிக்கப்பட்டன.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. எனவே, ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்