மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பாதரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பஜ்ருதீன். இவருடைய மகன் நிசாருதீன் (14). அங்குள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அத்துடன் சிலம்பம் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சீர்காழிக்கு வருகை தந்தார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக சிலம்பாட்ட பயிற்றுனர் தினேஷ்குமார் தலைமையிலான வீரர்கள் 30 பேர் சிலம்பம் சுற்றி அவரை வரவேற்றனர். பின்னர் சிலம்பாட்டக் குழுவினர், நேற்று மாலை கொள்ளிடம் அருகேயுள்ள கூழையாறு கடற்கரைக்குச் சென்று கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அலையில் சிக்கி நிசாருதீன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். சக மாணவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன் மாணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறிது நேரத்தில் அவரது உடல் பிணமாக கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த திருமுல்லைவாசல் கடலோர காவல்படை போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து நிசாருதீன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புதுப்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுப்பதற்காகச் சென்ற பள்ளி, மாணவர் பிணமாக திரும்பி வந்ததைக் கண்டு உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.