போலீசாரால் துப்பாக்கியால் சுடப்பட்ட ரவுடி ஆஸ்பத்திரியில் உயிரிழப்பு- வீரவநல்லூரில் பதற்றம், போலீசார் குவிப்பு…!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (42), திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக் குறிச்சியை சேர்ந்த வெங்கடேஷ் உள்ளிட்ட தொழிலாளர்கள் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குழி சுடலை கோயில் அருகே சாலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குவந்த தென்திருபுவனத்தைச் சேர்ந்த ரவுடிகள் பேச்சித்துரை (23), சந்துரு (23) ஆகியோர் கருப்பசாமி, வெங்கடேஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி உயிரிழந்தார். பின்னர் அந்த ரவுடிகள் அப்பகுதியில் வந்த காரையும், அரசுப் பேருந்தையும் வழிமறித்து ரகளை செய்ததுடன், கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர். இதில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து கேள்விப்பட்டதும், வீரவநல்லூர் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். போலீஸாரை பார்த்ததும் ரவுடிகள் தப்பியோடினர். அவர்களை விரட்டி சென்றபோது போலீஸ்காரர் செந்தில்குமார் (35) என்பவரை ரவுடிகள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். அவர்களை விரட்டிச்சென்ற போலீஸார் அங்குள்ள தோட்டத்தில் மறைந்திருந்த அவர்களைப் பிடிக்க முற்பட்டபோது ரவுடிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி பேச்சித்துரையை பிடித்தனர். ஆனால், சந்துரு தப்பியோடிவிட்டார். காயமடைந்த பேச்சித்துரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (11-03-2024) காலை உயிரிழந்தார். இதனால், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.