Rock Fort Times
Online News

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்…

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் பேட்டி..

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தென்மாவட்ட தலைவர்கள் கூட்டம் திருச்சியில் இன்று ( 10.07.2023 ) நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, நிஜாம் முகைதீன், மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஷபிக் அகமது, சுல்பிகர் அலி, ஹஸ்ஸான் பைஜி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தென்மாவட்டங்களை சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள், நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டன. பின்னர், கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது;-

எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொதுசிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பொதுசிவில் சட்ட நடவடிக்கைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு மசோதாவை தோற்கடிக்க வேண்டும். பொதுசிவில் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் பதிவுத்துறையால் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவு உள்ளிட்ட பணிகளுக்கான சேவை கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சொத்துவரி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த கட்டண உயர்வு, நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இதனால் வீடு, மனைகளின் விலை அதிகரிக்கும். ஆகவே, தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ள ஆவணப் பதிவு உள்ளிட்ட பணிகளுக்கான சேவை கட்டணங்களை குறைத்திட வேண்டும். நீண்ட நாட்களாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும். இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தில் நிபந்தனைகளை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்