கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம்…* திருச்சியில் நாளை (அக்.11) நடக்கிறது!
கரூரில், கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்களின் உறவினர்களுக்கு அரசியல் கட்சியினர் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் 16ம் நாள் நிகழ்ச்சி, “திருச்சி மக்கள் நலனுக்கான பொது மேடை” – என்கிற அமைப்பு சார்பில் நாளை (11-10-2025) நடக்கிறது. திருச்சி தலைமை தபால் நிலையம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் மாலை 5-30 மணி அளவில் நினைவு அஞ்சலி கூட்டம் நடக்கிறது. இதில், இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டுப் பிரார்த்தனையும் நடக்கிறது. இதில் சாதி, மத, கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்துமாறு அந்த அமைப்பின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுபோல இன்னொரு சம்பவம் நடைபெறக்கூடாது என்பதே இதன் நோக்கம் என்று அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இவர்கள் ஏற்கனவே டெல்லியில் போராடி உயிரிழந்த விவசாயிகளுக்காகவும் அஞ்சலி கூட்டம் நடத்தி பிரார்த்தனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9443694428

Comments are closed.