அமைச்சர் கே.என்.நேரு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்…* தனித்தனி கவுண்ட்டர்கள் மூலம் நோயாளிகளுக்கு பரிசோதனை!
திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேருக்கு நவம்பர் 9ம் தேதி பிறந்த நாள் ஆகும். அமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று(நவ. 6) தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த முகாமில் இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் பங்கேற்று நோயாளிகளுக்கு ரத்த கொதிப்பு பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, சிறுநீரக ரத்த பரிசோதனை, உடலில் கொழுப்பின் அளவு, தைராய்டு, கால் நரம்பு பரிசோதனை, கண் விழித்திரை பரிசோதனை, இசிஜி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இலவச மருத்துவ முகாமில் சர்க்கரையின் அளவு பரிசோதனை மேற்கொள்ளும் பொது மக்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது. மருத்துவ முகாமிற்கு வரும் பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் பதிவு செய்வதற்கு 30 கவுண்ட்டர்களும், இசிஜி எடுப்பதற்கு 15 கவுண்ட்டர்களும், ரத்த பரிசோதனைக்கு 35 கவுண்ட்டர்களும், விழித்திரை பரிசோதனைக்கு 10 கவுண்ட்டர்களும், கால் நரம்பிற்கு 15 கவுண்ட்டர்களும், இருதய பரிசோதனைக்கு 5 கவுண்ட்டர்களும் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் 60 மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள் நாளை காலை பொதுமக்களுக்கு வழங்கப்படுவதோடு பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வியாதிக்கும் அந்தந்த வியாதிக்கான சிறப்பு மருத்துவ நிபுணர் மூலம் மருத்துவ சிகிச்சைக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது. இந்த இலவச மருத்துவ முகாமை மாநகராட்சி மேயர் அன்பழகன் பார்வையிட்டு பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


Comments are closed.