Rock Fort Times
Online News

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கார் மீது மோதிய அரசு பேருந்து – மது போதையில் தரையில் உருண்டு புரண்ட ஓட்டுநர்…! ( வீடியோ இணைப்பு)

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து சென்னை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அதில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் புறப்பட்டு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் தான் சென்று இருக்கும். அதற்குள் அந்த பேருந்து எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் அப்பளம் போல நொறுங்கியது. விபத்தை கண்டதும் அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கிடந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காரில் இருந்தவர்கள் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. விபத்தை கண்டதும் பதறிய பலர் அப்பகுதியில் திரளாக கூடியிருந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் சிறிதும் சலனமின்றி மது போதையில் சாலையில் உருண்டு புரண்டார். அவர் ஏற்கனவே மது போதையில் இருந்த நிலையில் இடுப்பில் மற்றொரு மது பாட்டிலை சொருகி வைத்திருந்தார். இதற்கு மேல் அவரால் அந்த பஸ்ஸை இயக்க முடியாது, இந்த பஸ்ஸில் நாங்கள் பயணம் செய்ய மாட்டோம் என்று சக பயணிகள் கூறியதால் அவர்கள் மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து அங்கிருந்த சிலர் கூறுகையில், பேருந்து ஓட்டுனர் மதுபோதையில் இருக்கிறார். அவரிடம் எப்படி பேருந்தை இயக்க கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அரசு பணியில் இருக்கும் ஒருவர் அதுவும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்க்கும் முக்கிய பொறுப்பில் உள்ள , ஓட்டுநர் இவ்வாறு பொறுப்பின்றி நடந்து கொண்டது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயமாகும். அவரால் இன்று மூன்று, நான்கு உயிர்கள் பறி போக இருந்தது. அவர் மீது தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, சேலத்தில் வேகமாக இயக்கப்பட்ட தனியார் பேருந்து ஒன்று ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய போது முன்னால் சென்ற இரு மோட்டார் சைக்கிள்கள் மீது பயங்கரமாக மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். இதுபோல கலெக்க்ஷன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்