காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி முசிறி டிஎஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தந்தையால் பரபரப்பு …(வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (40). இவரது மனைவி தேன்மொழி. இவர்களது மகள் தனுஷ்யா (17). பிளஸ் -2 முடித்துள்ளார். இவர், கடந்த 03-04-2025 அன்று அருகிலுள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனைஅடுத்து மகளை காணவில்லை என முசிறி காவல் நிலையத்தில் விஜயன் புகார் செய்தார். முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லதுரை உத்தரவின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனுஷ்யாவை தேடி வந்தனர். இந்நிலையில் புகார் கொடுத்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் மகளை போலீசார் கண்டுபிடித்து தராததால் அதிருப்தி அடைந்த விஜயன், மகளை கண்டுபிடித்து தரக் கோரி முசிறி டிஎஸ்பி அலுவலகம் முன்பாக இன்று (மே 17) உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து காப்பாற்றினர். பின்னர், போலீசார் விஜயனை முசிறி சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற் கொண்டனர். காணாமல் போன மகளை போலீசார் கண்டுபிடித்து தராததை கண்டித்து டிஎஸ்பி அலுவலகம் முன்பாக தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed.