Rock Fort Times
Online News

திருச்சி, லால்குடி அருகே மது போதையில் தகராறு:- வாலிபரை நாட்டு துப்பாக்கியால் சுட்டவருக்கு வலை…!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோவிலில் நேற்று (ஏப்ரல் 8) தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்தநிலையில் லால்குடி அருகே கே.வி.பேட்டை – செங்கரையூர் இடைப்பட்ட பகுதியை சேர்ந்த பாண்டிதுரை என்பவர் தனது நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் அன்பில் மாரியம்மன் கோவிலுக்கு மது போதையில் சென்றுள்ளார். அப்போது அன்பில் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார், ஆனந்த், ஜெகன் உள்ளிட்ட 6 பேர் திருவிழாவிற்கு வந்திருந்தனர். இதில், போதை தலைக்கேறிய பாண்டிதுரை தான் வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு நடந்து வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், தனது இருசக்கர வாகனம் குறித்து கேட்பதற்காக வீரமணி வீட்டிற்கு பாண்டித்துரை சென்று கேட்டுள்ளார். உடனே வீரமணி, அன்பில் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார், ஆனந்த், ஜெகன் ஆகியோரிடம் சொல்லி இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொண்டார். அதன்பேரில் அவர்கள் அந்த இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து பாண்டிதுரையிடம் ஒப்படைப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது போதையில் இருந்த பாண்டித்துரை, சந்தோஷ் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் பாண்டித்துரை விலங்குகளை வேட்டை ஆடுவதற்காக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டுள்ளார். இதில் சந்தோஷ்குமார் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் சுருண்டு விழுந்த அவரை, அவரது நண்பர்கள் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாண்டித்துரை வைத்திருந்த துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தப்பிஓடிய பாண்டித்துரையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் லால்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்