‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பெயரில் திருச்சியில் மார்ச் 8-ந்தேதி திமுக மாநில மாநாடு…!
திமுக தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(20-01-2026) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் சில அறிவுரைகளை வழங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 29.12.2025 அன்று மேற்கு மண்டல மகளிரணி சார்பில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிரணி மாநாடு’ பெற்ற மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து வருகிற 26.01.2026 அன்று டெல்டா மண்டல ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு தஞ்சையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடுகளை பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரைக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட வீடுகளில் வீடு வீடாகப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்த கூட்டம் தீர்மானிக்கிறது. பிப்ரவரி-1 முதல் பிப்ரவரி-28 வரை தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையை மேற்கொள்ளும் வகையில் நட்சத்திரப் பரப்புரையாளர்களைதேர்ந்தெடுத்து தலைமைக்கழகம் அனுப்பி வைத்திட வேண்டும் என கூட்டம் கேட்டுக் கொள்கிறது. ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ – குழுவினருக்கான பயிற்சி மாநாடு கழக இளைஞரணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 14.12.2025 அன்று திருவண்ணாமலையில் வெற்றிகரமாக நடைபெற்ற வடக்கு மண்டல இளைஞரணி சந்திப்பைத் தொடர்ந்து, பிப்ரவரி 7-ல் விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது. ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும் என்ற பெயரில் கழக மாநில மாநாடு மார்ச்-8 அன்று தீரர்கள் கோட்டையாம் திருச்சியில் 10 லட்சம் கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளும் வகையில் மாபெரும் கழக மாநில மாநாட்டை நடத்துவதென இந்த கூட்டம் தீர்மானிக்கிறது என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.