Rock Fort Times
Online News

உழவுக்கும், உழவர்களுக்கும் மரியாதை செலுத்தும் திருநாள்…

பொங்கல் என்பது தமிழக மக்களின் பழமை வாய்ந்த பண்டிகையாகும். மழைக் காலத்துக்கும், குளிர் காலத்துக்கும் பிறகு வரும் அறுவடைக்காலம் இந்தத் தினத்தில்தான் தொடங்குகிறது. உழைப்பின் பலனை விவசாயிகள் அறுவடை செய்யும் நாள் இது. உழவுக்கும், உழவர்களுக்கும் மரியாதை செலுத்தும் உழவர் திருநாள் தை மாதத்தின் முதல் நாள். உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும், உலக இயக்கத்திற்கும் காரணமாக இருப்பவர் சூரிய பகவான். நாட்டின் முதுகெலும்பான உழவுத் தொழிலுக்கு உதவி புரியும் சூரிய பகவானுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நாளில் பொங்கல் வைத்து வழிபடப்படுகிறது. ஆடி மாதத்தில் விதைத்த நெற் பயிர்களை அறுவடை செய்து அந்த புது அரிசியில் பொங்கல் வைக்கப்படும். புதுப் பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொத்தை எடுத்து கங்கணம் தயாரித்து பானையை சுற்றி கட்டி பின்பு புது அரிசியுடன் வெல்லம், பாசிப்பருப்பு, பால், நெய், முந்திரி, திராட்சை சேர்த்துப் புதிய அடுப்பில் வைத்து அவரவர் சம்பிரதாய முறைப்படி சர்க்கரைப் பொங்கல் வைக்கப்படுகிறது. பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று மூன்று முறை உச்சரித்து சூரியனை நோக்கி வணங்கப்படுகிறது. பூஜை முடிந்ததும் கோமாதாவான பசுவுக்கும், முன்னோர்களை நினைத்து காகத்துக்கும் பொங்கல் வைத்தபிறகு அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்படுகிறது. தற்போது பெரும்பாலான மக்களுக்கு புது அரிசி கிடைப்பதில்லை என்பதால் கடையில் விற்கப்படும் பச்சரியை வாங்கி பொங்கல் வைத்து சாமி கும்பிடுகின்றனர். சிலர், சர்க்கரை பொங்கலோடு மற்றொரு பாத்திரத்தில் வெண்பொங்கல் மற்றும் காய்கறிகள் சமைத்தும், பழங்களை படைத்தும் சூரிய பகவானை கும்பிடுகின்றனர். இன்றைய காலகட்டத்தில்
பொங்கல் பொங்க வேண்டும் என்பதற்காக பால் சேர்க்கும் வழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர்.  ஆனால், இது பாரம்பரியமான வழக்கமல்ல. அரிசியை ஒரு முறை கழுவிய தண்ணீரை கீழே ஊற்றி விடவேண்டும். அதன் பிறகு, இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை கழுவும் தண்ணீரை பயன்படுத்தி பொங்கல் வைப்பது பாரம்பரிய வழக்கமாகும்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்