Rock Fort Times
Online News

திருச்சி, துவரங்குறிச்சியில் துணிகரம்:- வயதான தம்பதியை கட்டிப்போட்டு 19 பவுன் நகைகள் கொள்ளை…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த தளவாய்பட்டியில் வசித்து வருபவர் மகாலிங்கம்( 73). இவரது மனைவி கமலவேணி( 60). இருவரும் நேற்று இரவு( ஏப்ரல் 8) வீட்டில் இருந்த போது வெளியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு மகாலிங்கம் வெளியே வந்து பார்த்தார்.
அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நான்கு பேர் மகாலிங்கத்தை வீட்டிற்குள் தூக்கிச் சென்று கட்டி போட்டனர். இதனைப்பார்த்து அவரது மனைவி திருடன்…திருடன்… என்று கூச்சல் போடவே அவரையும் கட்டிப்போட்டு வாயை, பார்சல் ஒட்ட பயன்படுத்தப்படும் செலோடேப் மூலம் ஒட்டினர். பின்னர் கொள்ளையர்கள் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் கமலவேணி அணிந்திருந்த 5 பவுன் தங்க செயின் மற்றும் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தோடு ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து கட்டுகளை அவிழ்த்து விட்டனர். நடந்த சம்பவம் குறித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு மகாலிங்கம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருச்சியில் இருந்து
வரவழைக்கப்பட்ட மோப்பநாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்