திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் விரைவில் செல்போன் டவர் அமைக்கப்படும்…- அமைச்சர் கே.என்.நேரு…!
திருச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் செல்போன் டவர் விரைவில் அமைக்கப்படும். பிஎஸ்என்எல் நிர்வாகத்துடன் பேசி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். துப்புரவு பணியாளர்கள் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் தீர்வு காணப்படும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செல்லும் இடங்களில் எல்லாம் அவரது கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் போலி வாக்காளர்களை சேர்க்காமல் இருக்க கவனமாக இருப்போம். மிக முக்கியமாக வட இந்தியாவில் இருந்து வேலைக்கு வந்தவர்கள், நிரந்தர முகவரி இல்லாதவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வாய்க்கால்களில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பஞ்சப்பூரிலிருந்து குடமுருட்டி வரை ரூ.180 கோடியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.40 கோடியில் நில ஆர்ஜிதம் பணிகள் நடைபெற்று வருகிறது. நில ஆர்ஜிதம் இல்லாமல் நடைபெற வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலைகொடுக்கும் புதிய தொழிற்சாலை விரைவில் அமைய உள்ளது. அதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மேயர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.