திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்து மீது, கார் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னையில் வாடகைக்கு கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். தென்காசியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த அவர் மீண்டும் காரில் சென்னைக்கு நேற்று மாலை புறப்பட்டு சென்று கொண்டு இருந்தார். அந்த காரில் தென்காசி, ஆலங்குளத்தை சேர்ந்த செல்வகுமார், அவரது மனைவி யசோதா, இவர்களது ஒன்றரை வயது குழந்தை அனோனியா மற்றும் நண்பர் விஜயபாபு ஆகியோர் உள்பட 5 பேர் பயணித்தனர். திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு அந்த கார் சென்று கொண்டிருந்தபோது சாலையில் பழுதாகி நின்ற அரசு பேருந்தின் பின்னால் அசுர வேகத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யசோதா, குழந்தை அனோனியா மற்றும் விஜயபாபு மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் ஜோசப், செல்வகுமார் இருவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த இருவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பழுதாகி நின்ற அரசு பேருந்து ஓட்டுனர் நெடுஞ்சாலையில் ஒளிரூட்டும் எச்சரிக்கை பலகை ஏதும் வைக்காமல் அலட்சியமாக பேருந்தை நிறுத்தி இருந்த காரணத்தினால் பேருந்து நின்றதை கவனிக்காத கார் ஓட்டுநர், பேருந்து மீது மோதி இந்த கோர விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.