கரூர் அருகே குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற லாரி ஒன்று பிரேக் டவுன் ஆனதால் நள்ளிரவு 12 மணி முதல் வாகன நெரிசல் ஏற்பட்டு பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.கரூர் மாவட்டம் குளித்தலையில் மணப்பாறை செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து பருத்தி பேரல்களை ஏற்றுக் கொண்டு மணப்பாறை செல்வதற்காக வந்த லாரி ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது ரயில்வே கேட் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள உயர தடுப்பில் செல்ல முடியாமல் பிரேக் டவுன் ஆகி அங்கேயே நின்றது.இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த இரயில்வே கேட்டின் அருகே கடந்த சுமார் 10 மணி போராட்டத்திற்கு பிறகு ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு பின்னர் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.