20 ஆயிரம் கல்லூரி மாணவர்களே டார்கெட்! *போதைப் பொருட்களின் “ஹாட் ஸ்பாட்டாகும்” சமயபுரம்… * சாட்டை சுழற்றுவாரா திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ்!
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே 2 தனியார் பல்கலைக்கழகங்களும், ஒரு இன்ஜினியரிங் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் வெளியூரில் இருந்து ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் சூழலில், சமயபுரத்தில் கல்லூரி மாணவர்களை டார்கெட் செய்து மிகப்பெரிய போதை மாஃபியா கும்பல் போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்டவற்றை சப்ளை செய்வதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை உண்மையென நிரூபிக்கும் வகையில் சமீபத்திய போதை மாத்திரை, கஞ்சா கைது நடவடிக்கைகள் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த ஜூன் மாதம் சமயபுரம் சக்தி நகரை சேர்ந்த ஒருவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 110 போதை மாத்திரைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஜூலையில் 800 போதை மாத்திரைகளும், அக்டோபரில் திருச்சி – சென்னை பைபாஸ், சிதம்பரம் பிரிவு சாலை அருகே சுமார் 21 கிலோ கஞ்சாவும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சமயபுரத்தில் பெருகியுள்ள போதை மாத்திரை கலாச்சாரத்திற்கு முடிவுகட்ட முடியவில்லை.
ஏற்கெனவே சமயபுரத்தில் இயங்கிவரும் 3 ஒயின் ஷாப்களால் ஏற்படும் ரகளைகளையும், குற்றச் சம்பவங்களையும் தடுக்க முடியாமல் சமயபுரம் போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் பெருகிவரும் போதை மாத்திரை கலாச்சாரம் போலீசாருக்கு புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது.,
“திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் முக்கியமானது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு அம்மனை தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால், இப்பகுதியில் 24 மணி நேரமும் மக்கள் புழக்கம் அதிகமாகவே காணப்படும். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் போதை மாஃபியா கும்பல், சமயபுரத்தில் உள்ள லாட்ஜ்களில் ரூம் எடுத்து தங்கி கஞ்சா,போதை மாத்திரை ஆகியவற்றை விற்பனை செய்து கல்லாகட்டி வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அருகில் உள்ள கல்லூரி மாணவர்களையே தங்களுக்கான இலக்காக கொண்டு செயல்படுகின்றனர். டீன் ஏஜ் பருவத்தில் போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவர்களை மூளை சலவை செய்து, அவர்களையே ஏஜெண்டுகளாக மாற்றும் அவலமும் நடக்கிறது. போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் கேடி பேர்வழிகள், தங்கள் இடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். எனவே அவர்களை கைது செய்வதிலும் சிரமம் இருக்கிறது. போதாகுறைக்கு தற்போது பெருகியுள்ள ஆன்லைன் டெலிவரி கலாச்சாரத்தை தங்களுக்கான சப்ளை செயினாகவும் பயன்படுத்துகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து சமயபுரத்திற்கு ஜீன்ஸ் பேண்ட் பார்சல் வந்தது. இதில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தீவிர முயற்சிக்கு பிறகு அந்த பார்சலை பிரித்து பார்த்தால் அவ்வளவும் கஞ்சா பொட்டலங்கள். இப்படி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொரியர் மூலம் போதைப் பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது. சமயபுரத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும்,
உள்ளூர் பிரச்சனைகளை சரி செய்யவுமே போலீசாருக்கு நேரம் சரியாக இருக்கிறது. இதில் தற்போது தலையெடுத்திருக்கும் இந்த போதை நெட்வொர்க் கும்பலை களையெடுப்பது பெரும் தலைவலியாக மாறியுள்ளது” என்றனர். சமயபுரத்தில் போலீசாரின் ரோந்து நடவடிக்கையை பலப்படுத்தவும், போதைக் கூட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரான டோங்கரே பிரவீன் உமேஷ் சிறப்பு கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Comments are closed.