காவல் நிலையத்தில் ஓட்டுநர் தற்கொலை: ஆய்வாளர் உட்பட 2 காவலர்கள் ‘சஸ்பெண்ட்’…* வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்..!
தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், ஒரு புகார் தொடர்பான விசாரணைக்காக மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த நிலையில், காவல் நிலையத்தின் உள்ளேயே அவர் தூக்கிட்டுத் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபர் காவல் நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி கூறுகையில்,
“காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்தக் காட்சிகளை ஆய்வு செய்வதன் மூலம் சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் தெரிய வரும். மேலும், காவல் நிலையத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதால், நடைமுறைப்படி நீதித்துறை விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி ஒப்படைக்கப்படும்” என்று தெரிவித்தார். காவல் நிலையத்திலேயே விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 காவலர்கள் ‘சஸ்பெண்ட்;
காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சாலை மறியல்;
ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மரணத்திற்கு நீதி கோரி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரக் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பாலகிருஷ்ணனின் குடும்பத்தினரிடம் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.