திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நாளை (நவ. 15) நடைபெறுகிறது.
திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 10ம் தேதி தொடங்கியது. விழாவின் 4ம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினாா். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சி கால அபிஷேகம் முடிந்து, தீபாராதனை நடைபெற்றவுடன், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக சண்முக விலாச மண்டபத்தை அடைந்தாா்.
மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி தங்க ரதத்தில் கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவின் 5ம் நாளான இன்று (நவ. 14) இதே நிகழ்ச்சிகள், நாளை ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) மாலை 4 மணிக்கு கோயில் கடற்கரையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பக்தா்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். சூரசம்ஹார விழாவிற்காக திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயில் வளாகத்தில் தயாா் நிலையில் மருத்துவக் குழு, நாழிக் கிணறு பேருந்து நிறுத்தத்தில் வீரா்களுடன் தீயணைப்பு வாகனம், 108 வாகனம் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. கடற்கரை மற்றும் கோயில் வளாகத்தில் காவல் துறையினா் உயா் கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் உதவியுடன் கண்காணித்து வருகின்றனா். மேலும், தயாா் நிலையில் மீட்புப் படகுகளுடன் கடற்படையினா் கடலோரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Comments are closed.