பஸ் ஸ்டாண்ட் இல்லை.. பார்க்கிங் இல்லை… குப்பை கொட்ட இடமில்லை… * அடிப்படை வசதிகளுக்கே அல்லாடும் திருச்சி, வயலூர்!* முருக ஸ்தலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்குமா த.வெ.க அரசு?
நாளை (நவம்பர் -15 ) கந்த சஷ்டி திருவிழாவின் முக்கியமான நாளான முருக பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த சூரசம்ஹார பெருநாள். தமிழகத்தில் திருச்செந்தூர் உள்ளிட்ட முருகர் வாசம் செய்யும் அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக, முக்கியத்துவம் வாய்ந்தது திருச்சி அருகேயுள்ள குமார வயலூர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சூர சம்ஹாரத்தை பார்ப்பதற்காக சுமார் 15,000க்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் இந்தாண்டு “சூரவத” நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஜரூராக நடைபெற்று வருகின்றன. சிறப்பு பேருந்துகள் இயக்கம், போலீஸ் பந்தோபஸ்து ஆகியவை பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் வயலூர் முருகன் கோவில் நிர்வாகமோ, பக்தர்கள் கார், டூ வீலர் பார்க்கிங்ற்கே திருமண மண்டபங்களின் இடத்தை இரவல் வாங்க வேண்டிய பரிதாபமான நிலையில்தான் உள்ளது. ஏனென்றால் வயலூருக்கென சொந்தமாக பஸ் ஸ்டாண்டோ,
கார் மற்றும் பைக்குகளை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியோ, சுற்றுப்பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கான இடமோ இல்லாமல் அடிப்படை வசதிகளுக்கே அல்லாடும் நிலைதான் உள்ளது.
இதுகுறித்து இப்பகுதி முருக பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் நாம் பேசினோம். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது.,
திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலகளில் முக்கியமானது திருச்சி, குமார வயலூர். அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பட்ட முக்கியமான திருத்தலமான இங்கு, பக்தர்களின் வேண்டுதல்களை எல்லாம் முருக பெருமான் உடனுக்குடன் நிறைவேற்றித் தருவார்.கண்கண்ட தெய்வமாக முருகர் வயலூரில் அருள் பாலிப்பதால் இந்து முறைப்படி திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்த விரும்புபவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக வயலூர் முருகன் கோவிலைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அந்த அளவிற்கு இத்தலம் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. வயலூரை சுற்றி 35க்கும் அதிகமான திருமண மண்டபங்கள் இருக்கிறது. ஆனாலும் முக்கியமான சுப முகூர்த்த தினங்களில் நெரிசலால் வயலூரே திக்கு முக்காடிப்போய் விடும். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள். அதற்கேற்ற அகலமான சாலைவசதி இங்கு இல்லை. இதனால் வழி நெடுக பல கிலோமீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் போன்ற விசேஷ நாட்களில் முருகனை வழிபட வயலூருக்கு வருகைதரும் பக்தர்களின் கார் மற்றும் பைக்குகளை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதியும் கிடையாது. வயலூர் ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கென எந்த இடமும் இல்லை. இங்குள்ள 35க்கும் மேற்பட்ட கல்யாண மண்டபங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளைக்கூட அந்தந்த மண்டப உரிமையாளர்களே அப்புறப்படுத்தி வேறு இடத்தில் கொட்டிக் கொள்ள வேண்டும். குப்பை கொட்ட இடமில்லை என்கிற காரணத்தை சாக்காக வைத்து, அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியைக்கூட பல திருமண மண்டபங்கள் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளன. இதுபோன்ற இன்னும் பல்வேறு சிக்கல்கள் குமாரவயலூரில் குடி கொண்டிருக்கின்றன. வயலூர் முருகன் கோவில் மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த திமுக அரசாங்கத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மூன்று மண்டபங்கள், கழிவறை, வாட்டர் டேங்க் ஆகியவற்றை உள்ளடக்கிய பெருந்திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. அவை இன்னும் முடிவடையவில்லை. முருக பக்தர்களின் அவஸ்தை முடியவும் இல்லை. ஆகவே அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷின் சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்திற்கு உட்பட்ட வயலூர் முருகன் கோவிலுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு செய்துதர வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments are closed.