சீர்காழி அருகே மனைவி, மகனை இரும்பு கம்பியால் அடித்து கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய மீனவர்…* உருக்கமான தகவல்கள்..!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மனைவி மற்றும் மகனை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு, மீனவர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது;
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் கே. ஜலேந்திரன் ( வயது 60 ). மீனவர். இவரது மனைவி மலர்செல்வி (55). இவர்களது மகன் அதிகுகன் (23). ஜலேந்திரனின் குடும்பத்தில் நேற்று இரவு (23-10-2026) கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் எல்லை மீறியதில், ஆத்திரமடைந்த ஜலேந்திரன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தனது மனைவி மலர்செல்வி மற்றும் மகன் அதிகுகன் ஆகிய இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவி மற்றும் மகனைக் கொன்ற பிறகு, தான் செய்த குற்ற உணர்ச்சியிலும், அதிர்ச்சியிலும் ஜலேந்திரன் அதே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை வீட்டின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல் துறையினர், ஜலேந்திரனின் உடலையும் ரத்த வெள்ளத்தில் கிடந்த மலர்செல்வி மற்றும் அதிகுகனின் உடல்களையும் மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த இந்தச் சம்பவம் திருமுல்லைவாசல் மீனவ கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.