சிவகங்கையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு பிடித்த சாபக்கேடாக தவெக ஆட்சி அமைந்துள்ளது. எவ்வளவு சீக்கிரம் இந்த ஆட்சியை மக்கள் கொடுத்தார்களோ, அவ்வளவு சீக்கிரம் இந்த ஆட்சி வீழும். அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யவைத்து, அவர்களுக்கு ஆசைகாட்டி வாக்குகளை பெற்று ஆட்சியமைத்ததை மறைப்பதற்காகவே அதிமுக, திமுக கூட்டணி அமைக்க முயற்சித்ததாக கூறுகிறார்கள்.
தேர்தல் முடிந்தவுடன் தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழலில், விசிக, கம்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் அவர்களால் ஆட்சி அமைக்க முடியாத நிலைமை இருந்தது. எனவே, தவெகவால் ஆட்சி அமைக்க முடியாத பட்சத்தில், நீங்கள் நேர்மையாக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தவெகவுக்கு நான் கோரிக்கை வைத்தேன். தவெகவால் ஆட்சியமைக்க முடியாத பட்சத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சித்தது உண்மை. அதற்கு தவெகவிடம் ஆதரவு கேட்கவே முடிவு செய்தோம். திமுகவிடம் ஆதரவு கேட்கவில்லை. அப்போது பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு ஆதரவளிக்க கம்யூனிஸ்டுகள் தயங்கினார்கள். எனவே, திருமாவளவனை முதல்- அமைச்சராக்க எடப்பாடி பழனிசாமி உட்பட நாங்கள் அனைவரும் முயற்சித்தோம். வெறும் சினிமா மாயையை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். நிழலில் ஹீரோவாக இருந்தவர், நிஜத்தில் வில்லனாக உருமாறி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். ‘தனுஷ் அதிமுகவிற்கு வருகிறாரா?’ என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, “ஒரு நடிகர் வந்துதான் அதிமுகவைக் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் இல்லை; திரை நட்சத்திரங்கள் அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருப்பது காலம் காலமாக இருந்து வருவதுதான் என்று பதிலளித்தார்.

Comments are closed.